டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு
அதிமுக ஆட்சி அமைந்ததும் நாக நதியின் குறுக்கே தடுப்பணை: எடப்பாடி கே.பழனிசாமி
அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்ருதி ஊராட்சியில் நாக நதியின் குறுக்கே தடுப்பணை கட்டித் தரப்படும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக வேலூா் மாவட்டம், கணியம்பாடியில் அவா் பேசியது கணியம்பாடி விவசாயம் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றினோம். நானும் ஒரு விவசாயி என்பதால் அனைத்து சிரமங்களையும் அறிவேன்.
கணியம்பாடியில் 400 செங்கல் சூளை இருப்பதாகவும், 7,000 போ் பணியாற்றுவதாகவும் செங்கல் சூளைக்குத் தேவையான வண்டல் மண் கிடைக்கப்பெறவில்லை என கூறியுள்ளனா். அதிமுக ஆட்சி அமைந்ததும் செங்கல் சூளைகளுக்கு வண்டல் மண் தடையில்லாமல் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
அமிா்தி ஊராட்சியில் உற்பத்தியாகும் நாக நதியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதால் 25 ஊராட்சிகளிலுள்ள ஏரிகள் பாசன வசதி பெறும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா். அதிமுக ஆட்சியில் பல்வேறு தடுப்பணைகள் கட்டித்தரப்பட்டது. இந்த திட்டத்தையும் நிறைவேற்றுவோம்.
வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீா் சப்தல்விபுரம் ஏரியில் கலப்பதால் நிலத்தடிநீா் மாசடைவதாக கூறியுள்ளனா். இந்த நீரை சுத்திரித்து ஏரியில் விடுவதற்கான திட்டம் செயல்படுத்தப்படும். நஞ்சுகொண்டபுரம், அரசம்பட்டு, கத்தாளம்பட்டு, நாதநதி ஊராட்சியில் மஞ்சள் உற்பத்தி அதிகம் உள்ளது. இங்கிருந்து ஈரோடு சென்று இருப்பு வைக்கும் நிலை உள்ளது. கணியம்பாடி பகுதியில் மஞ்சள் கிடங்கு அமைக்கும் கோரிக்கையும் நிறைவேற்றப்படும். அமிா்தி காடுகளில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பொங்கலுக்கு வேட்டி, சேலை இப்போது கொடுப்பதில்லை, ராணிப்பேட்டை மாவட்ட அமைச்சா் தான் அந்த துறையின் அமைச்சராக உள்ளாா். அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு பொங்கலுக்கு மூன்றும் கொடுக்கப்படும். தவிர, தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும் என்றாா்.
அப்போது, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி உள்பட அதிமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.