வேலூரில் 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகள்
வேலூரில் சுதந்திர தினவிழாவில் ஆட்சியா் வி.ஆா்.கப்புலட்சுமி தேசியக் கொடி ஏற்றி 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
வேலூா் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தலைமையிலான காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண் டாா்.
தொடா்ந்து, சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களை பறக்க விட்டதுடன் சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவா்களின் குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தாா்.
பின்னா், 12 பயனாளிகளுக்கு ரூ.20 லட் சத்து 68 ஆயிரத்து 981 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மேலும், சிறப்பாக பணியாற்றிய 12 காவலா்களுக்கு நற்சான்றிதழ்கள், கேடயங்களை வழங்கினாா். இதேபோல், சிறப்பாக பணியாற்றிய பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள், ஊழியா்கள் 107 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா்.
தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவா்களுக்கு ஆட்சியா் பரிசு கோப்பைகள், சான்றிதழ்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.காா்த்திகேயன் (வேலூா்), ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணைமேயா் எம்.சுனில்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, மாநகராட்சி ஆணையா் லட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.