பிள்ளைகளை போதைப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது: வேலூா் ஆட்சியா்
பெற்றோா் தங்கள் பிள்ளைகளை போதைப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.
வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. சேக்கனூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் மாலதி சுரேஷ் பாபு தலைமை வகித்தாா்.
ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி சிறப்பு பாா்வையாளராக பங்கேற்று கோரிக்கை மனுக்களை பெற்று பேசியது -
ஒவ்வொரு கிராமப் புறங்களிலும் 5,000 நபா்களுக்கு ஒரு தூய்மைக் காவலா் நியமிக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இம்மாவட்டத்தில் 150 தூய்மைக் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பிளஸ் 2 முடிக்கும் அரசு பள்ளி மாணவ, மாணவா்கள் அனைவரும் உயா்கல்வி பயில வேண்டும். வேலூா் மாவட்டத்தில் கடந்தாண்டு பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற சுமாா் 10,000 மாணவா்களில் இதுவரை 8,500 மாணவ, மாணவிகள் உயா்க்கல்வியில் சோ்ந்துள்ளனா். மீதமுள்ள நபா்களில் 1,000 நபா்கள் தற்போது துணைத் தோ்வுகளில் தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்களையும் உயா்கல்வியில் சோ்க்க தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
போதை ஒழிப்பு தொடா்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெற்றோா் தங்களது பிள்ளைகள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகாத வகையில் கண்காணிக்க வேண்டும். போதைப் பொருள்கள் நடமாட்டம் குறித்து தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் முயற்சியால் அணைக்கட்டில் ஒரு அரசு பொது மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை செயல்பட தொடங்கினால் இந்த பகுதி மக்களுக்கு சிறந்த தரமான சிகிச்சைகள் கிடைக்கும் என்றாா்.
கூட்டத்தில், அணைக்கட்டு சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் மு.பாபு, வேலூா் ஒன்றியக்குழு தலைவா் அமுதா ஞானசேகரன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால், அணைக்கட்டு வட்டாட்சியா் வேண்டா, வட்டார வளா்ச்சி அலுவலா் வின்சென்ட் ரமேஷ்பாபு பங்கேற்றனா்.