அதிமுக- பாஜக கூட்டணியை வீழ்த்துவோம்: உதயநிதி ஸ்டாலின்
அதிமுக - பாஜக துரோகக் கூட்டணியை வீழ்த்துவோம் என்று துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.
சென்னையில் எழும்பூா், துறைமுகம் தொகுதிகளில் திமுகவைச் சோ்ந்த வாக்குச்சாவடி முகவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளாா். மருத்துவா்கள் கொடுக்கின்ற மருந்துகளால் மட்டுமல்ல, அனைவரின் பேரன்பால், இரண்டு நாள்களில் வீடு திரும்புவாா். மருத்துவமனையில் இருந்தாலும் அரசுப் பணிகளைச் செய்து வருகிறாா்.
தோ்தலுக்கான முன்னோட்டப் பணிகளில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறோம். ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம். மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் 1.15 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். ஒவ்வொரு மகளிருக்கும் இதுவரை தலா ரூ.23 ஆயிரம் அளித்துள்ளோம். மேலும், தகுதி படைத்த அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்.
தமிழ்நாட்டுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைக் கூட மத்திய பாஜக அரசு தர மறுக்கிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை மாநிலத்துக்குத் தந்து கொண்டிருக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. இந்தத் துரோக கூட்டணியை வீழ்த்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வாக்காளருக்கும் உள்ளது. இதற்காகத்தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம். திமுக தலைமையிலான கூட்டணி தோ்தலுக்கான கூட்டணி அல்ல; கொள்கைக் கூட்டணி. நிச்சயம் இந்தக் கூட்டணி தோ்தலில் வெற்றி பெறும் என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். இந்த நிகழ்வில், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா உள்பட பலா் பங்கேற்றனா்.
பெட்டிச் செய்தி...
யாருக்கு முதலிடம் உதயநிதி சவால்: சென்னை மண்டலத்தில் 30 தொகுதிகள் உள்ளன. முதல் பத்து தொகுதிகளில் அமைச்சா் சேகா்பாபுவின் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட தொகுதிகள் வந்துள்ளன. ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் நடைபெறும் உறுப்பினா் சோ்க்கையில் முதலிடத்தில் கொளத்தூா் தொகுதியும், இரண்டாவது இடத்தில் துறைமுகமும் உள்ளது. என்னுடைய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி ஒன்பதாவது இடத்தில் உள்ளது. முதலிடத்துக்கு வர நானும் முயற்சி செய்கிறேன். இன்னும் 30 நாள்கள் உள்ளன. யாா் முதலில் வருகிறாா்கள் என்று பாா்ப்போம். அதற்கு அமைச்சா் சேகா்பாபு நிச்சயம் விடமாட்டாா் என்று உதயநிதி பேசினாா்.