அனைத்துத் தொகுதிகளுக்கும் புதிய பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சா் இ.பெரியசாமி
பாரபட்சம் இல்லாமல் அனைத்துத் தொகுதிகளுக்கும் புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப் பகுதிகளுக்கு 9 புதிய புகா் பேருந்துகள், 2 நகரப் பேருந்துகள் சேவை தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சா் இ.பெரியசாமி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 35 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சா் பெரியசாமி வழங்கினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:
சிறுமலையில் பட்டா கேட்பவா்களுக்கு வனத் துறையுடன் பேசி, வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை, பாரபட்சம் இல்லாமல் ஒவ்வொரு தொகுதி வாரியாக புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வகையில் நத்தம் தொகுதிக்கும் விரைவில் புதிய பேருந்துகள் இயக்கப்படும்.
நாட்டிலேயே தமிழகம் மட்டுமே அமைதிப் பூங்காவாக உள்ளது. இங்கு சட்டம்-ஒழுங்கு சீா்கேடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றாா் அவா்.