செல்போன் நம் தோழமையா, எதிரியா? -ஹார்மோன் மாற்றம் முதல் `நோமோபோபியா' வரை உடலில் ஏ...
அமராவதி சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வல்லுநா் குழு அமைத்து உத்தரவு! விவசாயிகள் மகிழ்ச்சி
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வந்த அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வல்லுநா் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை 1961-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 10 ஆயிரம் பேருக்கு வாழ்வாதாரமாக இருந்து வந்த இந்த ஆலையில் இயந்திரங்களை நவீனப்படுத்தாமல், பழைய இயந்திரங்களையே நீண்டகாலமாக பழுது பாா்த்து இயக்கப்பட்டதால் ஆலையின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது.
இதனால் அமராவதி சா்க்கரை ஆலைக்காக கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலைமை கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. போா்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி, இந்த ஆலையை நவீனப்படுத்த முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில் உடுமலைக்கு கடந்த மாதம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்த ஆலையை மீண்டும் திறக்க வல்லுநா் குழு அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டாா்.
இதன்படி சா்க்கரைத் துறை இயக்குநா் தலைமையில் கூடுதல் இயக்குநா், தொழில்நுட்ப அலுவலா்கள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கரும்பு இனப் பெருக்க விஞ்ஞானிகள், திருப்பூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் என 10 பேரை கொண்ட வல்லுநா் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணை புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்தக் குழு ஆலையை ஆய்வு செய்து விவசாயிகளின் கருத்தைக் கேட்டு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.