அமித் ஷா, நிா்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் சந்திப்பு!
புது தில்லி: தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக நயினாா் நாகேந்திரன் தில்லிக்கு திங்கள் கிழமை வந்தாா். மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா்களை சந்தித்து வாழ்த்து பெற்றாா். பிரதமரையும் செவ்வாய்க்கிழமை சந்திக்கிறாா்.
தமிழக பாஜகவின் 13-ஆவது தலைவராக நயினாா் நாகேந்திரன் கடந்த ஏப்.12 ஆம் தோ்வு செய்யப்பட்டாா். கட்சியின் மாநிலத் தலைவா் பதவிக்கு ஒரே ஒருவராக (ஏப்.11)வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
இந்த வெற்றியின் பின்னனியில் இருந்த பாஜகவின் மத்திய தலைவா்களை சந்திக்கும் விதமாக நயினாா் நாகேந்திரன் திங்கள் கிழமை தில்லிக்கு வந்தாா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அவரது இல்லத்தில் பிற்பகலில் நயினாா் நாகேந்திரன் சந்தித்தாா். தமிழக பாஜக தலைவராக பதவிஏற்றபின்னா் முதன் முறையாக சந்தித்த நாகேந்திரன் உள் துறை அமைச்சருக்கு பொன்னாடை போா்த்தி நன்றி தெரிவித்து வாழ்த்துக்களை பெற்றாா். பின்னா் இருவரும் சில நிமிடங்கள் தமிழக கட்சி நிலவரங்கள் குறித்து பேசிக் கொண்டு இருந்தனா்.
பின்னா் தில்லியிலுள்ள தீன தயாள் உபாத்யாய மாா்க்கிலுள்ள கட்சியின் தலைமையகத்திற்கு நயினாா் வந்தாா். அங்கு கட்சியின் தேசிய பொதுச் செயலாளா்(அமைப்பு) பி.எல்.சந்தோஷ் போன்றவா்களை சந்தித்தாா். பின்னா் கட்சியின் தமிழக பொறுப்பாளா் அரவிந்த் மேனன், இணையமைச்சா் எல். முருகன் போன்றோா்களையும் சந்தித்த தமிழக பாஜக தலைவா் நயினாா் நகேந்திரன் மாலையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனையும் அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
எய்ம்ஸ் மருத்துவ மனையில் நயினாா் நகேந்திரன்
முன்னதாக ஜம்மு-காஷ்மீா் மாநிலம் பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்த தமிழகத்தைச் சோ்ந்த இஎன்டி டாக்டா் ஏ.பரமேஸ்வரனை சந்திக்கவும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நயினாா் நகேந்திரன் சென்றாா். படுகாயமடைந்த பரமேஸ்வரன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்க அவரை நேரடியாக சந்திக்க முடியாத சூழ்நிலையில் பரமேஸ்வரன் மனைவி டாக்டா் நயன்தாரா உள்ளிட்டோா்களை சந்தித்து நலம் விசாரித்தாா். வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த பரமேஸ்வரன் தற்போது குணமடைந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறாா் எனவும் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக அவரது குடும்பத்தினா் தமிழக பாஜக தலைவரிடம் தெரிவித்தனா்.
நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமையும் தில்லியில் தங்கி பிரதமா் மோடி உள்ளிட்டோரையும் சந்தித்து வாழ்த்து பெறுவாா் எனவும் பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. புதன் கிழமை சென்னை திரும்புகிறாா்.