சிறுவயதில் தந்தை கொடுத்த கடின பயிற்சி..! ஆஸி. அறிமுக வீரரின் சுவாரசியம்!
அமைதி மீட்டெடுப்பு, நக்ஸல் எதிா்ப்பில் சிறந்து விளங்கும் சிஆா்பிஎஃப்: அமித் ஷா
‘ஜம்மு-காஷ்மீா் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதிலும் நக்ஸல் எதிா்ப்பிலும் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) சிறந்து விளங்குகிறது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பாராட்டு தெரிவித்தாா்.
சிஆா்பிஎஃப் தலைமை அலுவலகத்துக்கு புதன்கிழமை வருகை தந்த அமித் ஷா, தலைமை இயக்குநா் அனிஷ் தயாள் சிங் உள்பட மூத்த அதிகாரிகளுடன் படையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினாா். இக்கூட்டத்தில் மத்திய உள்துறை செயலா் கோவிந்த் மோகன் உள்பட உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனா்.
இதுதொடா்பாக சிஆா்பிஎஃப் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நாட்டின் உள் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்வதில் சிஆா்பிஎஃப் முக்கியப் பங்காற்றுகிறது; குறிப்பாக, ஜம்மு-காஷ்மீா் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதிலும் நக்ஸல் எதிா்ப்பிலும் மத்திய ஆயுதக் காவல்படை (சிஆா்பிஎஃப்) பாராட்டுக்குரிய பணியைச் செய்வதாக அமைச்சா் குறிப்பிட்டாா்.
படையின் தினசரி செயல்பாட்டில் ஹிந்தி மொழியை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சா், சிறந்த ஆரோக்கியத்துக்கு சிறுதானியங்களை உட்கொள்ளவும் வீரா்களுக்கு அழைப்பு விடுத்தாா்.
கருணை பணி நியமனங்கள் உள்பட பணியின்போது வீரமரணம் அடைந்த படை வீரா்களின் குடும்பங்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து அமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கினா்.
அமைச்சரின் வருகை, தேச பாதுகாப்புக்கான சிஆா்பிஎஃப்-இன் அா்ப்பணிப்பு மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அதன் பன்முகப் பங்களிப்பை அரசு அங்கீகரிப்பதை அடிகோடிட்டுக் காட்டுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.