அம்பை, சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியா்களை நியமிக்க வலியுறுத்தல்
அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியா்களை அரசு நியமிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் பத்தமடையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.கே. பீா்மஸ்தான் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் எம்.எஸ்.சிராஜ் வரவேற்றாா்.
மாவட்டத் துணைத் தலைவா் களந்தை மீராசா, அமைப்பு பொதுச் செயலா் முல்லை மஜித், மாவட்டச் செயலா்கள் அம்பை ஜலீல், துலுவை தெளபிக், மாவட்ட பொருளாளா் ஏா்வை இளையராஜா, ராதாபுரம் பேரவைத் தொகுதித் தலைவா் வள்ளியூா் சலீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய தாலுகா தலைமையிடத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். கூடுதலாக செவிலியா் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களை நியமிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மாவட்டச் செயலா் கல்லிடைக்குறிச்சி சுலைமான் நன்றி கூறினாா்.