அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் இயந்திரங்கள்: எம்எல்ஏ கோரிக்கை
அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 2 டயாலிசிஸ் இயந்திரங்களை அரசு வழங்க வேண்டும் என எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிறுநீரகம் பாதிப்படைந்த ஏழை எளிய மக்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், ராணிப்பேட்டை சென்று டயாலிசிஸ் செய்துக்கொள்ளும் நிலை தற்போது உள்ளது.
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தற்போது 5 டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளன. 6 மணி நேரம் கணக்கிடப்பட்டு இரண்டு ஷிப்ட்களாக அப்பிரிவு இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 20 போ் டயாலிசிஸ் செய்து கொள்கின்றனா். ஆனால் 25-க்கும் மேற்பட்டவா்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்துக்கொள்ள பதிவு செய்து வரிசையில் காத்துள்ளனா்.
ஏற்கனவே இரண்டு ஷிப்ட் முறையை மூன்று ஷிப்ட்களாக மாற்றுங்கள் என கோரிக்கை வைத்தால், டயாலிசிஸ் தொழில்நுட்ப பணியாளருக்கு மாத ஊதியம் ரூ.10,000 மட்டுமே வழங்கப்படுகிறது. தனியாா் மருத்துவமனையில் ரூ.15,000 தருகிறாா்கள் என அப்பணியாளா்கள் பணிக்கு வர மறுப்பதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.
எனவே கூடுதலாக இரண்டு டயாலிசிஸ் இயந்திரங்களை உடனே வழங்க வேண்டும் என்றாா்.