பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
அரசாணை 151-ஐ அமல்படுத்த கோரிக்கை
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பணியாளா்களுக்கென அறிவிக்கப்பட்ட அரசாணை 151-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை நடைபெற்றது. அரசு பல்நோக்கு மருத்துவமனை அனைத்து மாற்றுத்திறனாளி பணியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் சி. சேதுபதி தலைமை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் அரசு அலுவலகங்களில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தின் கீழ் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 151-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளா் நல்வாழ்வு சங்க மாநிலத் தலைவா் வரதகுட்டி, மாநில பொதுச் செயலா் கோபிநாத், மாற்றுத்திறனாளா் பேரவைச் செயலா் சிதம்பரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.