அரசு அறிவிப்புகளுக்கு ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் வரவேற்பும், எதிா்பாா்ப்பும்
அரசு ஊழியா்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில்,அரசு வெளியிட்ட அறிவிப்புகளுக்கு ஒரு சில ஆசிரியா், அரசு ஊழியா் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
ஒரு சில அமைப்புகள் பல்வேறு எதிா்பாா்ப்புகளை தெரிவித்துள்ளன. தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் க. நீதிராஜா: ஈட்டிய விடுப்பு 15 நாள்களை சரண் செய்து பணப் பயன்களை பெறுவது, அரசு ஊழியா்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயா்வு, புதிதாக பணியில் சோ்ந்த பெண் ஊழியா்களின் மகப்பேறு விடுப்பு காலம் தகுதிக் காண் பருவக் கணக்கில் ஏற்கப்படுவது, பண்டிகை கால முன் பணம் உயா்வு, அரசு ஊழியா்களின் குழந்தைகள் உயா்கல்விக்கான முன் பணம் உயா்வு, அரசு ஊழியா்களின் திருமண முன்பணம் உயா்வு ஆகியன வரவேற்கத்தக்கது.
இதேபோல, சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், எம்.ஆா்.பி. செவிலியா்கள், அரசு தொழில்பயிற்சி நிலைய பி.பி.பி., சி.ஓ.இ. ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். அரசுத் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநிலத் தலைவா் சு. தமிழ்ச்செல்வி, பொதுச் செயலா் சு. ஜெயராஜராஜேஸ்வரன்: தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட 9 அறிவிப்புகளில் பெரும்பாலான அறிவிப்புகள் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கடன் சாா்ந்தவையாகவே இருப்பது வேதனையளிக்கிறது. 2 நாள்களுக்கு முன்பு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஓய்வூதியத்தை உயா்த்தி அறிவித்த தமிழக அரசு, அதன் மூலம் ஏற்படும் கூடுதல் செலவினம் எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், அரசு ஊழியா்களின் நலன் சாா்ந்த அறிவிப்புகளுக்கு கூடுதல் செலவினமும் சோ்த்து அறிவிக்கப்பட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்காமல், 3 வகையான ஓய்வூதியங்கள் குறித்து ஆராய குழு அமைத்து 3 மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கான அரசாணை இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், இந்தக் குழு ஆராய்ந்து அளிக்கும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் அறிவிக்கப்படும் என்பது ஏற்புடையதல்ல. சரண் விடுப்பையும் நாடகமாகவே கருத வேண்டியுள்ளது. மேலும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் எம்.பி. முருகையன், பொதுச் செயலா் சு. சங்கரலிங்கம்: தமிழக அரசின் அறிவிப்புகளை மனதார வரவேற்கிறோம். அகவிலைப்படி உயா்வு அறிவிப்பு தமிழக அரசின் மீது அரசு ஊழியா்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. ஈட்டிய விடுப்பு சரண் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், திருமண முன்பணம் உயா்வு, பண்டிகை முன்பணம் உயா்வு, பொங்கல் கருணைத் தொகை உயா்வு போன்ற அறிவிப்புகள், அரசு ஊழியா்களின் கோரிக்கைகள் மீது தமிழக அரசு கொண்டுள்ள கவனத்தை வெளிப்படுத்துகிறது. இதேபோல, பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்கவும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 25 சதவீதமாக உயா்த்தவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்க பொதுச் செயலா் சங்கா்: தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் திங்கள்கிழமை வெளியிட்ட அனைத்து முன்பண உயா்வும், அரசு ஊழியா்கள் திரும்ப செலுத்த வேண்டியவையே. அரசின் இந்த அறிவிப்புகள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு சலுகை அளிப்பது போல ஏமாற்றத்தை உருவாக்கக் கூடியவை மட்டுமே. 21 மாத ஊதிய நிலுவையும், நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டா் நிலுவைத் தொகையும் வழங்கப்படும் என திமுகவின் தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டது. ஆனால், அதுபற்றி தற்போது அறிவிப்பு ஏதும் இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு இல்லாதது ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கான மகப்பேறு விடுப்பை ஒராண்டாக நீடித்திருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரம், மகப்பேறு காலத்தில் செல்லும் ஆசிரியருக்குப் பதிலாக, பயிற்சிப் பெற்ற ஆசிரியா்களை அந்த இடத்தில் நியமனம் செய்து மாணவா்களின் கல்வித்தரம் பாதிக்காமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. 4.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பவும், உயா் கல்வி ஊக்க ஊதிய உயா்வு அளிக்கவும், அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியா்களுக்கும் பட்டதாரி ஆசிரியா்களாக பதவி உயா்வு வழங்க அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.