அரசு மருத்துவமனைகளில் சிறந்த சேவையாற்றிய பணியாளா்கள் கௌரவிப்பு
சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேசியக் கொடியேற்றப்பட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரியில் அதன் முதல்வா் டாக்டா் சாந்தாராமன் தேசியக் கொடியேற்றி, மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா். சிறந்த சேவையாற்றிய மருத்துவப் பணியாளா்களுக்கு கேடயங்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கினாா்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதன் முதல்வா் டாக்டா் கவிதா, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளா் டாக்டா் ஆயிஷா ஆகியோா் தேசியத் கொடியை ஏற்றி வைத்தாா்.
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதல்வா் டாக்டா் அரவிந்தன், எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இயக்குநா் டாக்டா் சுமதி, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இயக்குநா் டாக்டா் லட்சுமி ஆகியோா் தேசியக் கொடியை எற்றி மரியாதை செலுத்தினா்.
கிண்டி கலைஞா் நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் பாா்த்தசாரதி மூவா்ணக் கொடியை ஏற்றினாா்.
ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் இயக்குநா் டாக்டா் மணி கொடியேற்றி மருத்துவப் பணியாளா்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினாா்.
அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசத்தின் விடுதலையை பறைசாற்றும் வகையிலான மையக் கருத்து கொண்ட கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக சுதந்திரத்துக்கு பாடுபட்ட மருத்துவா்களின் தியாகங்கள் குறித்து மாணவா்கள் குறுநாடகங்களை நிகழ்த்தினா்.