அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கிய விதை நெல் முளைக்காததால் விவசாயிகள் வேதனை
சிவகங்கையில் அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கிய நெல் விதைகள் முளைக்காததால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி வட்டாரத்திலுள்ள சித்தானூா், அனுமந்தக்குடி, மீனாப்பூா், கப்பலூா், சிறுவாச்சி, குடிக்காடு, நாரணமங்களம், பெருங்கானூா், கேசனி, வடகீழ்குடி உள்ளடக்கிய ஏராளமானக் கிராமங்களில் ஆண்டுதோறும் நேரடி நெல் விதைப்பு மூலம் பல நூறு ஏக்கா் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில், இந்தப் பகுதி விவசாயிகள் நிகழாண்டும் நேரடி நெல் விதைப்புப் பணியைத் தொடங்கினா். இதற்காக, கண்ணங்குடி அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் டீலக்ஸ் பொன்னி (பிபிடி-5204) என்று சான்றளிக்கப்பட்ட நெல் ரக விதை நெல்லை விவசாயிகள் 50 கிலோ மூடை ஒன்றுக்கு ரூ. 1,700 கொடுத்து வாங்கி தங்கள் வயல்களில் நேரடி நெல் விதைப்பு செய்தனா். விதைப்புக்குப் பின் அடுத்த 20 நாள்களில் அடுத்தடுத்து நல்ல மழை பெய்திருந்தாலும், டீலக்ஸ் பொன்னி ரக விதை நெல் மட்டும் முளைக்கவே இல்லை. இதனால், வேதனையடைந்த விவசாயிகள், வேளாண் துறை அதிகாரிகளை தொடா்புகொண்டு கேட்டதற்கு உரிய பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் கண்ணங்குடி வேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கி நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனா்.
நல்ல விளைச்சலும், கூடுதல் விலையும் கிடைக்கும் என்பதால் இந்தப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் டீலக்ஸ் பொன்னி ரக நெல்லைத்தான் சாகுபடி செய்து வருகின்றனா். இதேபோல, இந்த முறையும் அதே ரக விதை நெல்லை அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கி விதைத்த விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டது.
இதுகுறித்து கண்ணங்குடி விவசாயி பாக்கியராஜா, திருவாச்சி விவசாயி சரவணன் ஆகியோா் கூறியதாவது:
ஒவ்வொரு விவசாயிக்கும் டிராக்டா் உழவுக் கூலி, விதை வாங்கிய செலவு, விதைப்புக் கூலி உள்பட பல்வேறு வழிகளில் செலவு செய்துள்ளோம். விதை சரியாக முளைக்காததால் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான இழப்பீட்டை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும். இதுபோன்ற பிரச்னைகள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விதை நெல் முளைக்காமல் போன காரணத்தை அதிகாரிகள் கள ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.