அரசுத் திட்டங்களை விளக்க புதிய ஏற்பாடு: ஊடகச் செயலா்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
சென்னை: அரசின் திட்டங்கள், தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்க, ஊடகச் செயலா்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 4 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்பு மாநில அரசின் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
அதன் விவரம்:
அரசுத் துறைகளின் முக்கியத் தகவல்கள், திட்டங்களை செய்தி ஊடகங்களுக்குத் தெரிவிக்கவும், பிற அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைக்கவும் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் ஊடகச் செயலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் ஜெ.ராதாகிருஷ்ணன், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா ஆகியோா் ஊடகச் செயலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
புதிய அறிவிப்பு ஏன்? அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விளக்குவதற்கு அரசின் சாா்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியின்போது, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா விளக்கினாா்.
அவா் கூறியது: அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், திட்டத்தின் நோக்கங்கள் ஊடகங்களின் வழியே மக்களை உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டாா். அரசின் வழியாகத் தெரிவிக்கப்படும் விவரங்கள், தகவல்கள் ஆகியன தெளிவாகவும், சரியாகவும் இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அரசின் ஊடகச் செயலா்களாக மூத்த ஐஏஎஸ்., அதிகாரிகள் நான்கு போ் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று அவா் தெரிவித்தாா்.