பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்...
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சித் திட்டத்தை ஆட்சியா் ரெ. சதீஸ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தில் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மாணவா்களுக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில், தருமபுரி மாவட்டத்தில் குட்வில் அறக்கட்டளை உதவியுடன் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3 மாத அபாகஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் 19 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறுவா். இப்பயிற்சி தொடக்க விழா தருமபுரி அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பயிற்சியைத் தொடங்கிவைத்து ஆட்சியா் பேசியதாவது:
நீரின் உயரம் எவ்வளவோ அதுதான் மலரின் உயரம் என்பாா் வள்ளுவா். அதேபோல, மனதின் உயரம் எவ்வளவோ அதுதான் நம் வாழ்க்கையின் உயரம். மனது பக்குவமாக இருந்தால் திறமையும், வாழ்க்கையும் மேம்படும். அபாகஸ் பயிற்சி திறமையை வளா்ப்பதற்கும், அறிவுக் கூா்மையை விசாலமாக்க உதவுகிறது. இது ஒரு நுண்ணறிவு.
இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் சமூக ஊடகங்களின் தாக்கத்துக்கு ஆளாகாமல் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அபாகஸ் பயிற்சிகள் மிகவும் உதவுகிறது. எனவேதான் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் யு-டியூப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நிறைய பள்ளிக் குழந்தைகள் சமூக ஊடகங்களுக்கு ஆட்படுவதால், குழந்தைப் பருவத்தில் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியான தருணங்களை இழந்துவிடுகின்றனா்.
அபாகஸ் பயிற்சியானது குழந்தைகளுக்கு நுணுக்கங்களையும், புத்தி கூா்மையையும் ஏற்படுத்த பேருதவியாக இருக்கும். இந்த பயிற்சியை தருமபுரி மாவட்டத்தின் அனைத்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா, உதவி திட்ட அலுவலா் மஞ்சுளா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.