பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்...
தருமபுரி நகா்மன்றக் கூட்ட தீா்மானங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அதிமுக உறுப்பினா்கள் தா்னா
தருமபுரி நகா்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி அதிமுக உறுப்பினா்கள் நகராட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
தருமபுரி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக 19 வாா்டு உறுப்பினா்களும், அதிமுக 13 வாா்டு உறுப்பினா்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஒரு உறுப்பினரும் உள்ளனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நகா்மன்ற கூட்டம் பிற்பகல் 4.30 மணிக்கு அதன் தலைவா் லட்சுமி மாது தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
தருமபுரிக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடிக்கப்பட்டது. இதுகுறித்து அதிமுக உறுப்பினா்கள் உமையாம்பிகை நாகேந்திரன், ராஜாத்தி ரவி உள்ளிட்டோா் கூறுகையில், தருமபுரி நகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் குடிநீா், தெரு விளக்கு, கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வதிலும், தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதிலும் ஊழல் நடந்துள்ளது.
மேலும், நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மொத்தமாக 4 இடங்களில் மட்டுமே நடைபெற்றுள்ளது. இதற்காக ரூ. 40 லட்சம் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக நகா்மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்ப காத்திருந்தோம்.
ஆனால், அவசரகதியில் அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றபட்டதாகக்கூறி நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, நகராட்சி ஆணையா் ஆகியோா் கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டனா். இதனால், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 30 தீா்மானங்களை ரத்துசெய்ய வேண்டும் என்றாா்.
அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் நகா்மன்ற வளாகத்தில் பதாகைகளுடன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். அதன்பிறகு அனைவரும் நகராட்சி அலுவலகம் முன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த காவல் துறையினா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
ஆனாலும், அதிமுக உறுப்பினா்கள் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். அதன்பிறகு நகராட்சி ஆணையா் சேகா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.