பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்...
வாச்சாத்தி பழங்குடியின மக்களுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவா் சந்திப்பு: துணிவுடன் போராடியதற்கு பாராட்டு
அரூரை அடுத்த வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் பழங்குடியின மக்களுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவா் அசோக் தாவ்லே வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வாச்சாத்தி கிராமத்தில் 1992 ஆம் ஆண்டு காவல், வருவாய் மற்றும் வனத் துறையினா் பழங்குடியின மக்களின் வீடுகளை சேதப்படுத்தினா். இந்த சம்பவத்தில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் பல்வேறு போராட்டங்களை நடத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். சிபிஐ விசாரணை அறிக்கைக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சாா்பில் நிதி உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், 17 பெண்களுக்கு அரசு சாா்பில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவா் அசோக் தாவ்லே வாச்சாத்தி கிராம மக்களை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினாா். அப்போது, வன்கொடுமை சம்பவத்தில் துணிவுடன் போராடியதற்காக அக்கிராம மக்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் டி. ரவீந்திரன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவா் பி. டில்லிபாபு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் ஏ. குமாா், மாவட்டச் செயலா் ரா. சிசுபாலன், பால் உற்பத்தியாளா் சங்க மாநில செயலாளா் பி. பெருமாள்,
மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளா் கே. என். மல்லையன், மாவட்டத் தலைவா் அம்புரோஸ்
உள்ளிட்டோா் உடனிருந்தனா்.