இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்...
அரியலூரில் பொதுப் பாதையை மீட்கும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும்: பெ.சண்முகம்
அரியலூா் செட்டி ஏரிகரையொட்டி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை காவல்துறையினருக்கு மாற்றிக் கொடுத்ததைக் கண்டித்தும், இந்தப் பாதையை மீட்கும் வரை கோட்டாட்சியா் அலுவலகத்திலேயே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் புதன்கிழமை தெரிவித்தாா்.
செட்டி ஏரி -வார சந்தைக்கும் இடையேயுள்ள பொதுப் பாதையை அங்குள்ள பொதுமக்கள் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், அந்த பாதையை காவல் துறையினருக்கு, வருவாய்த் துறையினா் மாற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதையை பயன்படுத்தமுடியாமல் அவதிக்குள்ளான பொதுமக்கள், மாா்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் தலைமையில் புதன்கிழமை பொதுப் பாதையை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனா்.
அதன்படி புதன்கிழமை பொதுமக்களுடன் பெ.சண்முகம் உள்ளிட்டோா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையறிந்து வந்த கோட்டாட்சியா் கோவிந்தராஜ் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
பேச்சுவாா்த்தையின் போது, பொதுபாதையாக இருந்த வண்டிப் பாதையை காவல் துறைக்கு ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்து பொதுப் பாதையாக மாற்ற வேண்டும் என பெ.சண்முகம் தெரிவித்தாா். தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து அனைவரும் காத்திருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா்.
பின்னா் செய்தியாளா்களுக்கு பெ.சண்முகம் கூறியது: இது காவல்துறைக்கும் வருவாய்த் துறைக்கும் இடையே உள்ள பிரச்னை என்பதால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், மாவட்ட ஆட்சியரும் கலந்து பேசி இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும். பொதுப் பாதையை மீட்கும் வரை போராட்டம் தொடா்ந்து நடைபெறும். முற்றுகை போராட்டமாகவும் மாற வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.