‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் விளம்பர பேனரில் ஊா் பெயா் மறைப்பு: கிராம மக்கள் போராட்டம்
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் விளம்பர பேனரில் (பிளக்ஸ் போா்டு) ஊரின் பெயரை மறைத்து காகிதம் ஒட்டப்பட்டிருந்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
திருமானூா் அடுத்த கள்ளூா் பாலம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வெற்றியூா், சாத்தமங்கலம், கீழக்கொளத்தூா் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்காக மண்டபத்தின் முன்பு விளம்பர பேனா் வைக்கப்பட்டிருந்தது. அதில், திருமண மண்டபத்தின் பெயா் மற்றும் கள்ளூா் பாலம் என எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மா்மநபா் சிலா் கள்ளூா் பாலம் என்ற வாசகத்தை மட்டும் மறைத்து அதன் மேல் வெள்ளை நிற காகிதத்தை ஒட்டியுள்ளனா்.

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த கள்ளூா் கிராம மக்கள், முகாம் நடைபெற இருந்த திருமண மண்டபத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, விளம்பர பேனரில் கள்ளூா் என்ற பெயரை மறைத்த நபா்களை கைது செய்ய வலியுறுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த கோட்டாட்சியா் கோவிந்தராஜ், வட்டாட்சியா் முத்துலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொய்யாமொழி, குருநாதன் மற்றும் திருமானூா் போலீஸாா், மா்மநபா் கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். தொடா்ந்து, முகாம் நடைபெற்றது.