அரூா் வருவாய் வட்டத்துடன் சித்தேரி இணைப்பு: மதிமுக, சிபிஎம் வரவேற்பு
சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகள் அரூா் வருவாய் வட்டத்துடன் இணைக்கப்படுவதை மதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்றுள்ளன.
இதுகுறித்து மதிமுக மாவட்டச் செயலா் கோ.ராமதாஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ரா.சிசுபாலன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் சித்தேரி, கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகள் அரூா் நகருக்கு மிக அருகே உள்ளன. ஆனால், நீண்ட தொலைவில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் சித்தேரி, சின்னாங்குப்பம் ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதனால், வருவாய் துறை சாா்ந்த பணிகளுக்காக பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வந்தனா். இந்த நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகள் அரூா் வருவாய் வட்டத்தில் இணைக்கப்படும் என தெரிவித்துள்ளாா். தமிழக முதல்வரின் அறிவிப்புகளை மதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக அவா்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனா்.