ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
திமுக தோல்வி பயத்தில் துவண்டுள்ளது
திமுக தோல்வி பயத்தில் துவண்டுள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
சுதந்திர தினத்தையொட்டி தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாஜகவினா் பேரணி சென்றனா். பேரணிக்கு பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தலைமை வகித்தாா். பாப்பாரப்பட்டி பேருந்து நிறுத்தப் பகுதியில் தொடங்கிய பேரணி, தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டப வளாகத்தில் நிறைவடைந்தது.
தொடா்ந்து மணிமண்டபம் மற்றும் பாரதமாதா ஆலயத்தில் உள்ள பாரதமாதா சிலை உள்ளிட்டவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் கே.பி.ராமலிங்கம் கூறியதாவது:
திமுகவினரும், முதல்வரும் தோல்வி பயத்தில் துவண்டுள்ளனா். வரவிருக்கும் சட்டப் பேரவை தோ்தலில் பாஜக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமையும் என்பதை தெரிந்துகொண்டுதான் தற்போது ஏராளமான திட்டங்களை அறிவித்து வருகிறாா். அந்த திட்டங்களுக்கான பொருளாதார சூழல், கட்டமைப்பு பற்றியெல்லாம் அவா்கள் கவலைப்படவில்லை. இந்த திட்டங்கள் அனைத்தும் ஏமாற்று வேலை.
கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்கு செய்யாதவற்றை, மீதமுள்ள சில மாதங்களில் செய்வதாக வேஷம் போட்டு வருகிறனா். இவையெல்லாம் தோல்வி பயத்தில் நடத்தும் நாடகங்கள். தமிழகத்தின் திமுக ஆட்சியை அகற்றுவதை நோக்கிதான் நாங்கள் பயணித்துக் கொண்டுள்ளோம் என்றாா்.