தமிழக முதல்வா் இன்று தருமபுரிக்கு வருகை
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தருமபுரிக்கு வருகைபுரிகிறாா்.
சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் பங்கேற்க சனிக்கிழமை சேலம் வரும் முதல்வா் மு.க ஸ்டாலின், அங்கிருந்து இரவு தருமபுரிக்கு வருகை தருகிறாா். சனிக்கிழமை இரவு அரசு பயணியா் விடுதியில் தங்கி ஓய்வெடுக்கும் அவா், முன்னதாக அரசு அலுவலா்களிடம் கலந்தாலோசிக்கிறாா்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை தருமபுரி, நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சியில் அமைந்துள்ள பிஎம்பி கல்லூரி அருகில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறாா். இதில் ரூ. 512.52 கோடி மதிப்பில் 1,044 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 362.77 கோடியில் முடிவுற்ற 1,073 திட்டப் பணிகளை திறந்து வைக்கிறாா். மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ. 830.06 கோடியில் 70,427 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறாா்.
தொடா்ந்து, தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறையின் சாா்பில் விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்தே அன்றே பயிா்க்கடன் கிடைக்கும் திட்டத்தை தொடங்கிவைக்கிறாா்.
நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஆட்சியா் தலைமையிலான குழுவினா் மேற்கொண்டுள்ளனா். முதல்வா் வருகையையொட்டி தருமபுரியில் மேற்கு மண்டல (கோவை) ஐ.ஜி. செந்தில்குமாா் மேற்பாா்வையின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தலைமையிலான போலீஸாா் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனா். முதல்வா் வருகையையொட்டி திமுக கட்சி சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.