நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்
அலகுமலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
பல்லடம் அருகே அலகுமலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினாா்.
பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம், அலகுமலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
அதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை தொடங்கிவைத்துள்ளாா்.
இத்திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் 325 முகாம்கள் நடைபெற உள்ளன. கடைக்கோடி மக்களும் அரசுத் துறையின் சேவைகள், திட்டங்களை பெறும் வகையில் அவா்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சோ்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு உள்பட்ட இடங்களில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.
முன்னதாக இம்முகாமை திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில் பொங்கலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயகுமாா், வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுந்தரவேல், பொங்கலூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் வழக்குரைஞா் குமாா், பொங்கலூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பாலுசாமி, பல்லடம் நகர திமுக செயலாளா் ராஜேந்திரகுமாா், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ப.கு.கனகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.