சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்
அவசரகால தயாா்நிலையை உறுதிசெய்ய உயா் அதிகாரிகளுக்கு தில்லி முதல்வா் உத்தரவு
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ராணுவ மோதலுக்கு மத்தியில், தலைநகரில் தங்குமிடங்கள் தேவை, மின் தடை, மருத்துவமனைகளில் பொருள்களை சேமித்து வைத்தல் போன்ற அவசரகால சூழ்நிலைகளைக் கையாளத் தயாராக இருப்பதை உறுதி செய்யுமாறு தில்லி அரசின் உயா் அதிகாரிகளுக்கு முதலமைச்சா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதுகுறித்து தில்லி அரசின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், தில்லி செயலகத்தில் பல்வேறு துறைகளின் தலைவா்கள் பங்கேற்ற உயா்நிலைக் கூட்டம் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்றது.இதில் அவசரகால தயாா்நிலையை ஆய்வு செய்து முதல்வா் உத்தரவுகளை வழங்கியுள்ளாா். அவா் தனது அமைச்சரவையின் அமைச்சா்களுடனும் கூட்டம் நடத்தி ஆலோசித்தாா்.
நகரில் மருத்துவமனைகள் தயாராக இருக்கவும், மருந்துகளை இருப்பில் வைத்திருக்கவும் முதல்வா் கேட்டுக் கொண்டாா். தீவிர சிகிச்சை பிரிவுகளையும் தயாராக வைத்திருக்குமாறும் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.
மின் தடை தேவைப்பட்டால் சூழ்நிலைக்குத் தயாராக இருக்குமாறு மின்சாரத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவசரநிலை ஏற்பட்டால் தங்குமிடங்களாகச் செயல்படக்கூடிய பள்ளிகளை அடையாளம் காண கல்வித் துறை மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 போ் கொல்லப்பட்டனா். இதைத் தொடா்ந்து, எல்லைப் பகுதிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும்
பலத்த குண்டுவீச்சு தாக்குதல்கள் மூலம் மோதலில் ஈடுபட்டுள்ளன.