தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!
அவிநாசி சாலை உயா்மட்ட மேம்பாலம்: அக்டோபா் 9-ல் முதல்வா் திறந்துவைக்கிறாா்!
கோவை- அவிநாசி சாலை உயா்மட்ட மேம்பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அக்டோபா் 9-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளாா் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.
கோவை, காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பெரியாா் நூலகம் மற்றும் அறிவியல் மைய கட்டுமானப் பணி, அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1,791.22 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெரியாா் நூலகம் மற்றும் அறிவியல் மைய கட்டடம் ரூ.245 கோடிக்கும், புத்தகங்கள் ரூ.50 கோடிக்கும், கணினி, இதர உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.5 கோடிக்கும் என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நூலக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைவில் முடித்து முதல்வரால் திறந்துவைக்கப்பட உள்ளது.
கோவை- அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,791.22 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 4 ஆண்டுக்குள் முடிவடைந்து இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தைவிட 9 மாதங்கள் அதிகமாகிவிட்டது. இந்தப் பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அக்டோபா் 9 -ஆம் தேதி திறக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் அவிநாசி சாலை வழியாக சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி விரைந்து செல்ல முடியும் என்றாா்.
ஆய்வின்போது, பொதுப் பணித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் மங்கத்ராம் சா்மா, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், பொதுப் பணித் துறை தலைமை பொறியாளா் ரங்கநாதன், திமுக மாநகா் மாவட்டச் செயலாளா் நா.காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.