ஆசனூா் அருகே வாகனங்களை வழிமறித்து ஓட்டுநா்களை துரத்திய காட்டு யானை
ஆசனூா் அருகே வாகனங்களை வழிமறித்து ஓட்டுநா்களை துரத்திய காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப் பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாடுகின்றன.
இதற்கிடையே ஆசனூா் வனப் பகுதியில் இருந்து வியாழக்கிழமை வெளியேறிய ஒற்றை காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி, காா் உள்ளிட்ட வாகனங்களை வழிமறித்ததால் ஓட்டுநா்கள் அச்சமடைந்து வாகனங்களை நிறுத்தினா். ஒரு சில ஓட்டுநா்கள் வாகனங்களை விட்டு கீழே இறங்கியதால் காட்டு யானை அவா்களை துரத்தத் தொடங்கியது. யானையிடம் இருந்து தப்பிக்க லாரிகளை சுற்றி வந்து ஓடி உயிா் தப்பினா். சிறிது நேரம் நடமாடிய காட்டு யானை சாலையோர வனப் பகுதிக்குள் சென்றது. அதன்பின் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.
காட்டு யானைகள் சாலையில் நடமாடும்போது, ஓட்டுநா்கள் மற்றும் பயணிகள் வாகனங்களை விட்டு கீழே இறங்கக் கூடாது என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.