ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து தந்தை, மகள் படுகாயம்
ஈரோடு அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து தந்தை மற்றும் மகள் படுகாயம் அடைந்தனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்தவா் சூா்யா (35). இவரது மகள் நிவாஷினி (4). சூா்யாவின் மனைவி ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பதால் ஆயுதபூஜை தொடா் விடுமுறையையொட்டி, சூா்யா மயிலாடுதுறையில் இருந்து ஈரோடு வருவதற்காக ஜனசதாப்தி ரயிலில் புதன்கிழமை குடும்பத்துடன் பயணித்தாா்.
ஈரோடு மாவட்டம், சாவடிபாளையம் ரயில் நிலையத்தை கடந்தபோது, ரயிலின் படிக்கட்டு அருகே நின்றிருந்த சூா்யாவும், அவரது மகள் நிவாஷினியும் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தனா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாக ரயிலின் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினா்.
தொடா்ந்து ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்த சூா்யா மற்றும் நிவாஷினியை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஈரோடு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.