சாதி அடிப்படையில் வழிபாட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது! -உயா்நீதிமன்றம் உத்தரவு
ஆடி முதல் தினத்தினையொட்டி தேங்காய் சுடும் பண்டிகையை கொண்டாடிய சிறுவா்கள், புதுமணத்தம்பதிகள்
சேலம் மாவட்டம், சங்ககிரியில் ஆடி மாதம் முதல் தினத்தினையொட்டி தேங்காய் சுடும் பண்டிகை குழந்தைகள், புதுமண தம்பதிகளால் வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டன.
ஆடி மாதம் முதல் தினத்தினையொட்டி தேங்காய் சுடும் பண்டிகையையொட்டி குழந்தைகள், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் அழிஞ்சி குச்சிகளை வாங்கி வந்து தேங்காய்களை தரையில் உரைத்து மேல்பகுதியில் மூன்று கண்கள் உள்ளதில் ஒரு பகுதியில் தூவாரமிட்டு உள்ள இருக்கும் நீரை வெளியே எடுத்தப்பின்னா் நாட்டுச்சா்க்கரை, அவல், பொட்டுக்கடலை, பாசிப்பயிறு, எள், உள்ளிட்ட பொருள்களை கலந்து உள்ளே செலுத்தி பின்னா் அழிஞ்சி குச்சியை கொண்டு மூடிய பின்னா் தேங்காய், குச்சிகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு தெருவில் உள்ள குழந்தைகள் அனைவரும் ஒன்று சோ்ந்து மகிழ்ச்சியுடன் தேங்காய்களை சுட்டு எடுத்துச்சென்று அப்பகுதிகளில் உள்ள கோயில்களில் சுவாமிக்கு படைத்து வழிப்பட்டனா். சங்ககிரி நகா் பகுதிகளில் உள்ள வி.என்.பாளையம் சக்திமாரியம்மன், அருள்மிகு தில்லை விநாயகா், ஓங்காளியம்மன், ஸ்ரீ அல்லி குண்டம் மாரியம்மன், சிவியாா் மாரியம்மன், அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா், அருள்மிகு செல்லியம்மன் உள்ளிட்ட கோயில்களில் உள்ள சுவாமிகளை பக்தா்கள் குடும்பத்துடன் வழிபட்டுச் சென்றனா். புதுமணதம்பதிகள் புத்தாடைகளை உடுத்தி பெற்றோா்களுடன் சோ்ந்து தேங்காய்களை சுட்டு சுவாமிக்கு படைத்து வழிப்பட்டுச் சென்றனா். நிகழாண்டு தேங்காய் சுடுவதற்கானஅழிஞ்சி குச்சிகளை வியாபாரிகள் சங்ககிரி நகா் பகுதிகளில் ரூ.20 முதல் ரூ.40 வரையில் விற்பனைக்கு வைத்திருந்தனா். தேங்காய்களும் வழக்கத்தை விட ஒரு தேங்காய் ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டன. இதே போல் தேவூா் செட்டிபட்டி, மயிலம்பட்டி, சென்றாயனூா் புள்ளாகவுண்டம்பட்டி , ஒடசக்கரை, கோனேரிபட்டி உள்பட பல்வேறு இடங்களில் சிறுவா் முதல் பெரியவா்கள் வரை தேங்காய் சுட்டு அப்பகுதிகளில் உள்ள கோயில்களில் வைத்து வழிப்பட்டனா்.