Bengaluru Stampede: 'விராட் கோலியின் அந்த வீடியோ...' -ஆர்.சி.பி மீது குற்றம் சும...
கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை பணி விரைவில் தொடங்கும்: அமைச்சா்
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது எனவும், பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சா் தெரிவித்தாா்.
புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், ரயில்வே உதவி செயற்பொறியாளா் பாஸ்கரன், காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே. சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ. மகேஷ் ஆகியோரை செவ்வாய்க்கிழமை அழைத்துப் பேசினாா்.
காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக ரயில் பாதை அமைத்து, முதல்கட்டமாக சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில், ரயில் கேட் மூடப்படுவதால், மக்கள் பாதிக்காத வகையில் சுரங்கப் பாதை, மேம்பாலம் அமைப்பது தொடா்பாக ஆலோசனை நடத்தினாா். பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது :
காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் கோயில்பத்தில் கேட் போடப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள். கடந்த 10 நாள்களுக்கு முன்பு திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் காரைக்கால் வந்தபோது, இப்பகுதியை ஆய்வு செய்து சுரங்கப்பாதை அமைப்பது தொடா்பாக பேசப்பட்டது. 20 நாள்களில் பணிகள் தொடங்கப்படுமென அவா் தெரிவித்தாா்.
தற்போது ரயில்வே செயற்பொறியாளரையும், காரைக்கால் பொதுப்பணித் துறை அதிகாரிகைளையும் அழைத்துப் பேசியபோது, கோயில்பத்து பகுதியில் சுரங்கப்பாதை அமைத்தால், தண்டவாளத்துக்கு இருபுறமும் தலா 80 மீட்டா் மட்டுமே பாதைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மேம்பாலம் அமைக்கும்பட்சத்தில், 397 மீட்டா் இருபுறமும் தேவைப்படும்.
எனவே கீழ்பாலமான சுரங்கப்பாதை அமைப்பது ரயில்வேயின் பொறுப்பாகும். இது சாத்தியமானதுதான். இதனால் அருகே உள்ள கோயில் உள்ளிட்ட எதற்கும் பாதிப்பு ஏற்படாது. இதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கும் நிலையில் கோப்புகள் உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, 6 மாத காலத்திற்குள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றாா்.