காரைக்காலில் தோட்டத்தில் திடீா் தீ: புகை மூட்டத்தால் மக்கள் பாதிப்பு
காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் புதன்கிழமை திடீரென தீப்பிடித்ததால், புகை மூட்டம் ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் பாதிப்புக்குள்ளாயினா்.
காரைக்கால் நகரப் பகுதி வள்ளலாா் நகா், கீரைத் தோட்டம், பெரியப்பேட் பகுதி, பி.கே. சாலை, காமராஜா் சாலை உள்ளிட்ட பல்வேறு நகர பகுதிகளுக்கு நடுவே மரங்கள் பல வளா்ந்திருக்கும் ஒரு தோட்டத்தில் புதன்கிழமை மாலை திடீரென தீ பற்றியது. சிறிது நேரத்தில் தோட்டம் முழுவதும் தீ மளமளவென பரவியது.
சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் புகை மூட்டம் ஏற்பட்டது. குடியிருப்புவாசிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினா்.
தீயணைப்பு நிலையத்திலிருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வீரா்கள் விரைந்து சென்று, தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். 2 மணி நேரத்துக்கு மேலாக தீயணைப்புப் பணி நடைபெற்றது. தீயில் மரங்கள் பல எரிந்து சாம்பலாயின.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. நகரக் காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.
