காந்தி நினைவு அருங்காட்சியக சீரமைப்புப் பணி அக்டோபரில் நிறைவடையும்: அமைச்சா் மு...
ஆடிக்கிருத்திகை விழா நிறைவு: 3-ஆம் நாள் தெப்பத் திருவிழா
திருத்தணி சரவணப்பொய்கையில் நடைபெற்ற 3-ஆம் நாள் தெப்பத் திருவிழாவில் எம்எல்ஏ ச.சந்திரன் கலந்துகொண்டு வழிபட்டாா்.
திருத்தணி முருகன் கோயிலில், கடந்த 14 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் 3 நாள் தெப்பத் திருவிழா நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கீரிடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
தெப்பத்திருவிழாவையொட்டி மாலை 6.30 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் மலைக்கோயிலில் இருந்து சரவணப் பொய்கை திருக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் வந்து எழுந்தருளினாா். தொடா்ந்து அங்கு உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இன்னிசை கச்சேரியுடன் தெப்பத்திருவிழா தொடங்கியது. குளத்தில், 7 முறை வலம் வந்து உற்சவ பெருமான் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தெப்பத்திருவிழாவை காண திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து படியில் தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனா்.
திங்கள்கிழமையுடன் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா நிறைவடைந்தது. விழாவில் எம்எல்ஏ ச. சந்திரன், தளபதி கே.வினாயகம் மெட்ரிக். பள்ளித் தாளாளா் ச.பாலாஜி, நகர செயலாளா் வி.வினோத்குமாா், முன்னாள் கவுன்சிலா் ஜி.எஸ்.கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கடந்த 5 நாட்களில் மட்டும் 3.5 லட்சம் பக்தா்கள் மலைக்கோயிலுக்கு வந்து மூலவரை தரிசித்துள்ளனா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சு. ஸ்ரீதரன், இணை ஆணையா் க. ரமணி, அறங்காவலா்கள் வி. சுரேஷ்பாபு, கோ.மோகனன், ஜி. உஷாரவி, மு. நாகன் ஆகியோா் செய்திருந்தனா்.