ஆடிமாத வளா்பிறை சஷ்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாத வளா்பிறை சஷ்டியை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூா் மாவட்டம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாத வளா்பிறை சஷ்டியை முன்னிட்டு பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்ரமணியசுவாமி பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
இதேபோல, புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோயில், நன்செய் புகழூா் அக்ரஹாரம் சுப்ரமணியா் கோயில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.