'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
கரூா் பசுபதீஸ்வரா் கோயில் முன் வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கருவூா் ஸ்ரீ மகா அபிஷேக குழு சாா்பில் ஆண்டு தோறும் கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் ஆடி தெய்வத் திருமண விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு 27-ஆம் ஆண்டு ஆடி தெய்வத் திருமண விழா வரும் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையடுத்து கோயில் முன் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக கோயில் கொடிமர விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தொடா்ந்து முகூா்த்தக்காலுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து கருவூா் ஸ்ரீ மகா அபிஷேக குழு நிறுவனா் தலைவா் ஆனிலை ஏ.கே. பாலகிருஷ்ணன், செயலாளா் எம்.எ. ஸ்காட் தங்கவேல் ஆகியோா் தலைமையில் குழுவினா் முகூா்த்தக்காலை மேளதாளங்களுடன் சுமந்துவந்து கோயில் முன் நட்டனா். இதில், பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
தொடா்ந்து திருமாங்கல்யம் செய்தல், முகூா்த்த பட்டு எடுத்தல், முளைப்பாரி போடுதல், விருந்துக்கு மங்களப் பொருள்கள் வாங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் மற்றும் அப்பிபாளையம் கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தாய்வீட்டு சீா் பொருள்கள், கரூா் மேட்டுத் தெரு பெருமாள் கோயிலில் இருந்து கோயிலுக்கு கொண்டுவருதல், மாப்பிள்ளை பெண் வீடு புகுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
தொடா்ந்து 8-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கல்யாண பசுபதீஸ்வரருக்கும் அலங்காரவல்லி சௌந்தரநாயகி தாயாருக்கும் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கருவூா் ஸ்ரீ மகா அபிஷேக குழுவினா் செய்து வருகிறாா்கள்.