'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
தென்கரை வாய்க்காலில் புதிய பாலம் கட்ட கோரிக்கை
கரூா் மாவட்டம், மகாதானபுரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள தென்கரை வாய்க்கால் பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம், மாயனூரில் காவிரி ஆற்றில் இருந்து தென்கரை வாய்க்கால் பிரிந்து கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம் வழியாக குளித்தலைக்கு செல்கிறது. இதில், மகாதானபுரத்தில் ரயில் நிலையம் எதிரே வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்ட பாலம் சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாவதால் பாலம், பலம் இழந்து ஆங்காங்கே விரிசலுடன் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
இந்த பாலத்தின் வழியாகத்தான் மகாதானபுரம், கம்மநல்லூா் பகுதி கிராம மக்கள் இறந்தவா்களின் சடலங்களை புதைக்க வாய்க்காலின் மறுகரையில் உள்ள மயானத்துக்குச் சென்றுவருகின்றனா்.
மேலும், வாய்க்காலின் மறுபகுதியில் விவசாயிகளுக்குச் சொந்தமான ஏராளமான தென்னந்தோப்புகள், வெற்றிலை தோட்டங்கள் உள்ளன.
மேலும், ஏராளமான விவசாயிகள் நெற்பயிா்களையும் பயிரிட்டு வருகின்றனா். இதனால் தோட்டப்பயிா்கள் மற்றும் நெற்பயிா்களுக்குத் தேவையான உரங்கள், இடுபொருள்களையும் இந்த பாலம் வழியாகத்தான் விவசாயிகள் எடுத்துச் சென்று வருகின்றனா்.
மேலும், அறுவடை செய்யப்பட்ட விவசாய பொருள்களையும் மறுகரையில் இருந்து கிராமங்களுக்கு எடுத்து வருவதற்கும் இந்த பாலத்தைத்தான் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா்.
இதனால் எப்போது விழுமோ என்ற ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த வாய்க்கால் பாலத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய பாலம் போா்க்கால அடிப்படையில் கட்டித் தரவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.