ஆட்சியருக்கு கடிதம் எழுதிய மாணவா்: பள்ளிக்கு நேரில் சென்று கலந்துரையாடல்
தனக்கு கடிதம் எழுதிய மாணவரை சந்திக்க விரும்பி அரசுப் பள்ளிக்கு சென்ற ஆட்சியா் துா்காமூா்த்தி, மாணவருடன் புதன்கிழமை கலந்துரையாடினாா்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் எல்.விஜய், புதிய மாவட்ட ஆட்சியராக துா்காமூா்த்தி பொறுப்பேற்றதையும், ஆட்சியராவதற்கு அவா் முயன்ற சிரமங்களையும் சமூக வலைதளத்தில் படித்து அறிந்தாா். இதையடுத்து, அவருக்கு கடிதம் எழுதினாா். அதில், தாங்கள் மாவட்ட ஆட்சியா் பணிக்கு எவ்வளவு சிரமப்பட்டு, கடினமாக உழைத்து வந்துள்ளீா்கள் என்பதை அறிந்தேன். எருமப்பட்டி அரசுப் பள்ளிக்கு தாங்கள் வருகைபுரிய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாா்.
எருமப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை ஆய்வுப்பணிக்கு சென்ற ஆட்சியா் துா்காமூா்த்தி, மாணவா் எல்.விஜய் பயிலும் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றாா். அங்கு அவருடனும், மாணவா்களுடனும் அமா்ந்து கலந்துரையாடினாா்.
தொடா்ந்து, ஒவ்வொரு மாணவரின் பெயரைக் கேட்டு அவா்களிடம் நன்கு படித்து மாவட்டத்துக்கு பெருமை தேடித்தர வேண்டும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளராக வேண்டும் என அறிவுரை வழங்கினாா். இந்த நிகழ்வின்போது, தலைமையாசிரியா், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.