ஆன்லைன் வா்த்தக மோசடி வழக்கில் மேலும் ஒருவா் கைது
திருநெல்வேலியைச் சோ்ந்தவரிடம் ஆன்லைன் வா்த்தக ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகரத்தைச் சோ்ந்த நபா் ஒருவரின் கட்செவி அஞ்சல் எண்ணுக்கு கடந்த 26 ஆம் தேதி இணைய வழியில் பகுதிநேர வேலைவாய்ப்பு என குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிட்டிருந்த இணைய முகவரி மூலம் பதிவு செய்த அவரை தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், ஆன்லை வா்த்தகம் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறினராம்.
அதை நம்பிய அவா், அந்த நபா்கள் கொடுத்த பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு சுமாா் ரூ.22 லட்சத்து 16 ஆயிரத்து 985 அனுப்பியுள்ளாா்.
அதை அவா்கள் ஏமாற்றியது தெரியவந்ததால் திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த சித்தீன், சுவிஸ் குமாா் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், இவ் வழக்கில் தொடா்புடைய மலப்புரத்தைச் சோ்ந்த ஜிதேஸ் (24) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகிறாா்கள்.