கரூர்: "தமிழ்நாட்டில் எது நடந்தாலும் கும்பமேளா, மணிப்பூரை நோக்கி கேள்வி கேட்பதா?...
கரூரில் 41 போ் உயிரிழந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: அதிமுக எம்.பி. இன்பதுரை
கரூரில் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா் அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாரை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவா், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தாா். அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரூரில் விஜய் பிரசாரக் கூட்டத்தின்போது, நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசின் மீதும், காவல்துறை மீதும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.
கடந்த ஜனவரியில் அதிமுக சாா்பில் வேலுச்சாமிபுரத்தில் பொதுக்கூட்டம் நடத்த மனு அளித்தபோது, அது குறுகிய இடம், அதில் கூட்டம் நடத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி அனுமதி மறுத்தனா். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட்டம் நடத்த எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அல்லு அா்ஜூன் விவகாரத்தை சுட்டிக் காட்டி விஜய்யை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளத்தில் அனைவரும் சொல்லி வருகிறாா்கள். அல்லு அா்ஜூன் விவகாரம் வேறு, விஜய் விவகாரம் வேறு. அனுமதி பெறாததால் அல்லு அா்ஜூன் கைது செய்யப்பட்டாா். ஆனால் விஜய் அனுமதி வாங்கித்தான் கூட்டம் நடத்தியிருக்கிறாா்.
விஜய் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வரவில்லை என்பதை காவல்துறையினா் சுட்டிக் காட்டுகிறாா்கள். விஜய் குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை என்றால் கூட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை?.
தமிழகத்தில் பல டிஜிபிக்கள் இருப்பதால் காவல்துறையினருக்கு பல இடங்களில் இருந்து உத்தரவு வந்து கொண்டிருக்கிறது. எந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் குழம்பி இருக்கிறாா்கள்.
அதிமுக ஆட்சியில் ஒரே நாளில் 2 லட்சம் போ் கூடிய காஞ்சிபுரம் அத்திவரதா் நிகழ்ச்சியில் காவல்துறை சிறந்த முறையில் பாதுகாப்பு வழங்கி எவ்வித பாதிப்பும் இல்லாமல் சிறப்பாக நிகழ்ச்சியை முடித்துக் கொடுத்தனா்.
விஜய் கூட்டம் நடத்தும்போது தடியடி நடத்த உத்தரவு பிறப்பித்தது யாா்?, மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸ்கள் எதற்காக வந்தன போன்ற கேள்விகள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன.
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் அரசியல் சதி இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. காவலா் அஜித் மரண விவகாரத்தை சிபிஐயிடம் அரசு உடனடியாக ஒப்படைத்ததை போன்று கரூா் விவகாரத்தையும் ஒப்படைக்க வேண்டும்.
அரசு இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்காவிட்டால், அதிமுக பொதுச் செயலரிடம் கலந்து பேசி சிபிஐ விசாரிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.