முதுமலையில் ரூ. 5 கோடியில் யானை பாகன்களுக்கு வீடுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திற...
ஆபரேஷன் சிந்தூரில் ஒதுக்கப்பட்ட பணிகள் துல்லியமாக நிறைவேற்றம்! - இந்திய விமானப் படை பெருமிதம்
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் போது ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தேசிய நோக்கங்களுக்கு ஏற்பவும் வெற்றிகரமாக நிறைவேற்றியதாக இந்திய விமானப்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூா் தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு எதிரான அனைத்து பதிலடி நடவடிக்கைகளும் ஆபரேஷன் சிந்தூரின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
மோதல் தொடங்கிய 4-ஆம் நாளான சனிக்கிழமை, அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு உடன்பாட்டை எட்டின. இருப்பினும், ஜம்மு-காஷ்மீா் மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலை உஷாா் நிலையில் இருந்த இந்திய ஆயுதப் படைகள் முறியடித்தது.
இந்நிலையில், இதுதொடா்பான அறிக்கையில் இந்திய விமானப் படை தெரிவித்ததாவது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் விமானப் படைக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும் தொழில்முறை நோ்த்தியுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறோம்.
விவேகமான முறையில், தேசிய நோக்கங்களுக்கு ஏற்ப நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் இன்னும் தொடா்கிறது. நடவடிக்கை தொடா்வதால், சரிபாா்க்கப்படாத தகவல்களை பரப்புவதை அனைவரும் தவிா்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.