அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்க்கை: மே 27 வரை விண்ணப்பிக்கலாம்
ஆபரேஷன் சிந்தூர்! அமைதி கோரும் ரஷியா!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷியா கோரிக்கை விடுத்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு எல்லையில் போர்ப்பதற்றம் நிலவி வருவதாக பல்வேறு நாடுகளும் வருத்தம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இரு நாடுகளும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷியா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது, ``ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட ராணுவ மோதல் தீவிரமடைந்து வருவது, வருத்தத்தை ஏற்படுத்துகிறது. பயங்கரவாதத்தை ரஷியா கண்டிப்பதுடன், பயங்கரவாத அச்சுறுத்தலைத் திறம்பட எதிர்த்துப் போராட, உலகளாவிய சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
1972 சிம்லா ஒப்பந்தம் மற்றும் 1999 லாகூர் பிரகடன விதிகளின்படி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்னைகள், அமைதியான வழிமுறைகளால்தான் தீர்க்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், பாகிஸ்தானின் ராணுவத் தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் இந்திய ராணுவம் கூறியது.
இருப்பினும், இந்தியா திடீர் நடவடிக்கையை எதிர்பாராத பாகிஸ்தான், இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூர்: செய்திகள் - நேரலை