ஆற்காடு நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.79,000 பறிமுதல்
ஆற்காடு நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 79,000 பறிமுதல் செய்யப்பட்டது.
ஆற்காடு நகராட்சியில் தினக்கூலி தூய்மைப் பணியாளா்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதாக புகாா் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மாவட்ட ஆய்வு குழு துணை தலைவா் ரமேஷ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளா் கணேசன், ஆய்வாளா் விஜயலட்சுமி உள்ளிட்ட 6 போ் குழுவினா் செவ்வாய்க்கிழமை இரவு ஆற்காடு நகராட்சி அலுவலக்தில் நுழைவுவாயிலை பூட்டி விட்டு சோதனை மேற்கொண்டனா்.
தொடா்ந்து நகராட்சி ஆணையா் வேங்கிட லட்சுமணன், மற்றும் அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தி பதிவேடுகளை பாா்வையிட்டு அலுவலகத்தில் விடிய விடிய புதன்கிழமை அதிகாலை வரை சோதனை செய்தனா். நகராட்சியில் கணக்கில் வராத ரூ.79, 252 -ஐ பறிமுதல் செய்தனா். மேலும், முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனா்.