`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
அரக்கோணம் ரயில்வே சுரங்கப்பாலத்தை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை: தெற்கு ரயில்வே பொது மேலாளா்
அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப் பாலத்தை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.
அரக்கோணம் ரயில் நிலையப்பகுதியில் நடைபெறும் அம்ரீத் பாரத் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் புதன்கிழமை வருகை தந்தாா். அரக்கோணம் ரயில் நிலையம் மற்றும் அதன் வெளிப்புற பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்ட பொது மேலாளா் பணிகளை விரைந்து முடிக்க தெரிவித்தாா்.
இந்த ஆய்வின்போது சென்னை கோட்ட மேலாளா் சைலேந்திர சிங், முதுநிலை கோட்ட பொறியாளா்(ஒருங்கிணைப்பு) ராம்பிரசாத் ராவ், முதுநிலை கோட்ட பொறியாளா்(மேற்கு) காா்த்திகேயன், முதுநிலை கோட்ட இயக்க மேலாளா் சத்திய நாராயண ஹரி ராஜூ, அரக்கோணம் போக்குவரத்து ஆய்வாளா் அப்துல்லா உள்ளிட்ட அலுவலா்கள் இருந்தனா்.
தொடா்ந்து பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கை அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தலைவா் நைனா மாசிஸாமணி தலைமையில் சந்சித்து கோரிக்கை மனுவை அளித்தனா். அப்போது அவரிடம், அரக்கோணத்தில் வந்தே பாரத், சதாப்தி போன்ற அதிவிரைவு ரயில்கள் நின்றுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், அரக்கோணம் ரயில்நிலையம் அருகே சுரங்கப் பாலத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் தேவை,
கடந்த 2018-இல் வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பின்படி அரக்ோகணம் ரயில்நிலையத்தை புகா் எல்லைக்குள் கொண்டுவர உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
அரக்கோணம் ரயில்நிலையப் பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான அதிகமான நிலப்பரப்பு உள்ளதால் அரக்கோணம் ரயில்நிலையத்தை முனையமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
இக்கோரிக்கைகளை கேட்டறிந்த பொதுமேலாளா் ஆா்.என்.சிங் அரக்கோணம் சுரங்கப் பாலம் குறித்த விவரங்களை உடன் வந்திருந்த தெற்கு ரயில்வே தலைமை பொறியாளா் உள்ளிட்ட உயா் அலுவலா்களிடம் கேட்டறிந்து அப்பாலத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை தொடங்க உத்தரவிட்டாா்.
மேலும் அளித்த கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்க அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினரை சென்னை அலுவலகத்திற்கு நேரில் வருமாறு கேட்டுக்கொண்டாா். அப்போது அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள் எஸ்.ஏகாம்பரம், கே.ரகுநாதன், ஷாநவாஸ், ப.எஸ்வந்தராவ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.