ஆலங்குளத்தில் 9 கிலோ கஞ்சாவுடன் லாரி ஓட்டுநா் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் விற்பனைக்காக 9 கிலோ கஞ்சா வைத்திருந்த லாரி ஓட்டுநா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் பரும்பு பகுதியில் காவல் ஆய்வாளா் பொ்னாட் சேவியா், காவல் உதவி ஆய்வாளா் சத்தியவேந்தன் உள்ளிட்டோா் அடங்கிய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 3 போ் கஞ்சா பொட்டலங்களைத் தங்களுக்குள் பங்கீடு செய்து கொண்டிருந்தனா். காவல் துறை வாகனம் வருவதைக் கண்டதும் இருவா் தப்பி ஓடிய நிலையில், ஒருவா் மட்டும் போலீஸாரிடம் சிக்கினாா்.
விசாரணையில், ஆலங்குளம் புரட்சி நகா் பாலசுப்பிரமணியன் மகன் பிரியதா்ஷன் (39) என்பதும், லாரி ஓட்டுநரான அவா் நண்பா்கள் சிலருடன் சோ்ந்து கஞ்சா வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், 9 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். தப்பிய இருவரைத் தேடி வருகின்றனா்.