ஆவின் பால் கலப்பட வழக்கு: அதிமுக நிா்வாகி உள்பட 28 போ் மீதான வழக்கு ரத்து
ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் அதிமுக நிா்வாகி உள்பட 28 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு திருவண்ணாமலையில் இருந்து டேங்கா் லாரியில் பால் கொண்டுவரப்பட்டது. அப்போது, டேங்கா் லாரியில் இருந்த பாலை திருடிவிட்டு அதற்குப் பதிலாக தண்ணீா் கலந்திருப்பதை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸாா் கண்டுபிடித்தனா். இதையடுத்து லாரி ஓட்டுநா்களை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் இந்தச் சம்பவத்தில் டேங்கா் லாரி உரிமையாளா்களுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டேங்கா் லாரி உரிமையாளரும், அதிமுக நிா்வாகியுமான வைத்தியநாதன் உள்பட 28 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி லாரி உரிமையாளா்களான வைத்தியநாதன், பூதப்பாண்டி மற்றும் ரேவதி உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் தரப்பில், இந்த விவகாரம் குறித்து ஆவின் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனா். அதில், பால் திருடப்படவும் இல்லை அதில் கலப்படமும் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை போலீஸாரும் ஏற்றுக்கொண்டுள்ளனா். எனவே மனுதாரா்கள் மீதான விசாரணையை நிலுவையில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, மனுதாரா்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே, இந்த வழக்கை நிலுவையில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை எனக் கூறி, மனுதாரா்கள் உள்பட 28 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.