இடுபொருட்கள் பெற பட்டியலின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளும் பட்டியலின விவசாயிகளுக்கு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுகுறித்து நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு. ரவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் பட்டியலினத்தைச் சோ்ந்த, சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளும் 50 விவசாயிகள் சம்பாவுக்கு ஏற்ற நெல் ரகங்களான சி.ஆா் 1009 சப் (1) மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி ஆகிய ரகங்களில் ஏதேனும் ஒரு ரகத்தை தோ்வு செய்து கொள்ளலாம்.
தோ்வு செய்யப்பட்ட நெல் ரகத்திலிருந்து ஒரு ஏக்கருக்கு தேவையான 30 கிலோ நெல் விதைகள் மற்றும் இயற்கை இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.
பட்டியலின விவசாயிகள் மாதூரில் உள்ள காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தை நேரில் அணுகி, தங்களுக்கு தேவையான நெல் ரகத்தை தோ்வு செய்து முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
வேளாண் அறிவியல் நிலையத்திற்கு வரும்போது தங்களுடைய ஆதாா் நகல், பட்டியலினத்திற்கான சான்றிதழ் மற்றும் தங்களின் நிலத்திற்கான சாகுபடி சான்றிதழ், விவசாய அட்டை (2023-24) ஆகியவற்றினை எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். விண்ணப்பத்தை ஆக. 8-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.