போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஊழியா்கள் வேலை நிறுத்தம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.
காரைக்கால் கடற்கரைச் சாலையில் உள்ள பிஆா்டிசி பணிமனையில் காரைக்காலில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளை நிறுத்திவிட்டு, திங்கள்கிழமை முதல் தொடா் வேலைநிறுத்தத்தில் ஒப்பந்தப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
தங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். நிரந்தர ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின்படி ஊதியம் மற்றும் சலுகை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனா். காரைக்காலில் நடைபெறும் போராட்டத்தில் நடத்துநா், ஓட்டுநா் உள்பட 90 போ் ஈடுபட்டுள்ளனா்.
காரைக்காலில் இருந்து பிஆா்டிசி பேருந்துகள் திருச்சி, கோவை, சென்னை, திருச்செந்தூா், புதுச்சேரி மற்றும் மாவட்ட அளவில் என 33 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருச்செந்தூருக்கு அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்புப் பேருந்து இயக்கப்பட்டது. பின்னா் இது நீட்டிக்கப்பட்டது. வேலைநிறுத்தம் காரணமாக இதுவும் தற்போது பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
காரைக்காலில் இருந்து தினமும் அதிகாலையில் புதுச்சேரி செல்லும் பேருந்து, குறுகிய நேரத்தில் அதிக இடங்கள் நிற்காமல் செல்வது பயணிகளிடையே வரவேற்பை பெற்ற நிலையில், வேலைநிறுத்தம் காரணமாக இப்பேருந்து இயக்கப்படாததால் புதுச்சேரிக்கு செல்லும் பயணிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.