இணையதளம் மூலம் பண மோசடி: ஆந்திர இளைஞா் கைது
இணையதளம் மூலம் திருமணம் செய்துகொள்வதாகவும், அரசு பல் மருத்துவா் பணி வாங்கித் தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவரை சைபா் க்ரைம் போலீஸாா் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.
கடந்த டிசம்பா் 2024-இல் பெரம்பலூா் புகா் பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணுடன், இணையதளம் மூலமாக பழகி திருமணம் செய்துகொள்வதாகவும், ரயில்வே துறையில் அரசு பல் மருத்துவா் பணி வாங்கித் தருவதாகவும் அடையாளம் தெரியாத இளைஞா் ஒருவா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அந்தப் பெண், அரசு பல் மருத்துவா் வேலைக்காக 15.95 லட்சத்தை அந்த இளைஞரின் வங்கி கணக்கில் பறிமாற்றம் செய்துள்ளாா். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த இளைஞா், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், பெரம்பலூா் மாவட்ட சைபா்கிரைம் காவல் நிலையத்தில் ஜன. 4-ஆம் தேதி அளித்த புகாரையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், எஸ்பி ஆதா்ஷ் பசேரா உத்தரவின்பேரில், ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் கடந்த 19 -ஆம் தேதி ஆந்திர மாநிலத்துக்குச் சென்று மேற்கொண்ட விசாரணையில், ஸ்ரீ சத்யா சாய் மாவட்டம், கதிரியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் பரத் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து, 2 கைப்பேசிகள், சிம்காா்டுகளை கைப்பற்றி பெரம்பலூருக்கு அழைத்து வந்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பரத், சிறையில் அடைக்கப்பட்டாா்.