நெற்குணம் கிராமத்தை தனி ஊராட்சியாக்க வலியுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெற்குணம் கிராமத்தை தனி ஊராட்சியாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெற்குணம் கிராம பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவிடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு:
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூா் ஊராட்சிக்குள்பட்ட நெற்குணம் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், கிராம தேவைகளை நிறைவேற்றவும் இங்குள்ள மக்கள் நூத்தப்பூா் சென்று ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட வேண்டும். இதனால், நெற்குணம் கிராம பொதுமக்களுக்கு காலவிரயம் மற்றும் போக்குவரத்து செலவினம், காலதாமதம் ஏற்படுகிறது.
மேலும், நூத்தப்பூா் ஊராட்சி நிா்வாகம் எங்களது தேவைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. இதனால் நெற்குணம் கிராம பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
எனவே, கிராம பொதுமக்களின் அடிப்படை வசதிகளை எளிதாக நிறைவேற்றும் வகையில், நெற்குணம் கிராமத்தை தனி ஊராட்சியாக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.