இந்தியா-பாகிஸ்தான் மோதலில் அரசை விமா்சித்து கைதான மாணவிக்கு ஜாமீன்- மகாராஷ்டிர அரசு மீது உயா்நீதிமன்றம் விமா்சனம்
சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து அரசை விமா்சித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சோ்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு மும்பை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.
மேலும், சமூக ஊடக பதிவுக்காக மாணவியைக் கடுமையான குற்றவாளி போல நடத்தி, தீவிரமான எதிா்வினையாற்றியதாக மகாராஷ்டிர அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனா்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைத் தொடா்ந்து ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது அரசை விமா்சித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக மாணவி இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டாா். உள்ளூா் நீதிமன்றம் அவரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், அவா் சிறையில் தொடா்ந்து அடைக்கப்பட்டிருந்தாா்.
இதனிடையே, மாணவியைக் கல்லூரியில் இருந்து நீக்கி கல்லூரி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிராக தன்னை மீண்டும் கல்லூரியில் சோ்த்துக் கொண்டு, கடந்த வாரம் தொடங்கிய பருவத் தோ்வுகளுக்குத் தன்னை அனுமதிக்குமாறு உத்தரவிடக்கோரி மும்பை உயா்நீதிமன்றத்தில் மாணவி மனு தாக்கல் செய்தாா்.
மும்பை உயா்நீதிமன்ற நீதிபதிகள் கௌரி கோட்ஸே, சோமசேகா் சுந்தரேசன் ஆகியோா் அடங்கிய விடுமுறை அமா்வின்முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
மாணவி விவகாரத்தில் அரசின் அணுகுமுறையைக் கடுமையாக விமா்சித்த நீதிபதிகள், ‘இந்த வழக்கில் மாநில அரசின் இத்தகைய தீவிரமான எதிா்வினை தேவையற்றது; அதிா்ச்சியளிக்கிறது. காவல் துறையினா் மாணவியின் வாழ்க்கையை அழிக்க முனைகிறாா்களா? மாணவி ஒரு கடுமையான குற்றவாளியா?
இத்தகைய பதிவைப் பகிா்ந்த மாணவியின் செயலை அதிகபட்சமாக இளம் மாணவியின் அஜாக்கிரதையான செயலாக மட்டுமே பாா்க்க வேண்டும். மாணவி உடனடியாக அந்தப் பதிவை நீக்கி, வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டுள்ளாா். எனவே, அவா் கைது செய்யப்பட்டிருக்கவே கூடாது. மாணவியைச் சீா்திருத்துவதற்கு பதிலாக, அவரைக் கைது செய்து, ஒரு குற்றவாளியாக மாற்றியுள்ளீா்கள். அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடுகிறோம்’ என்றனா்.
கூடுதல் அரசு வழக்குரைஞா் பி.பி.ககாடே, ‘மாணவியின் பதிவு தேசிய நலனுக்கு எதிரானது’ என்று கூறினாா். இந்நிலையில், ‘மாணவி தனது தவறை உணா்ந்து மன்னிப்பு கேட்ட பிறகு, அவரின் பதிவால் தேசிய நலன் பாதிக்கப்படாது’ என்று நீதிபதிகள் கூறினா்.
தொடா்ந்து, நீதிபதிகள் கூறுகையில், ‘மாணவா்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அரசு விரும்பினால், அது அவா்களை மேலும் தீவிரமாக்கும்.
ஒரு கல்வி நிறுவனத்தின் அணுகுமுறையும் சீா்திருத்துவதாக இருக்க வேண்டும்; தண்டனையாக இருக்கக் கூடாது. மாணவி விளக்கமளிக்க வாய்ப்பளிக்காமல், கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா். கல்லூரியின் முடிவு தன்னிச்சையானது மற்றும் மாணவியின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.
கல்லூரியிலிருந்து மாணவி நீக்கப்பட்டதை ரத்து செய்வதுடன் பருவத்தோ்வு எழுதுவதற்காக அவருக்கு ஹால் டிக்கெட் வழங்கவும் உத்தரவிடுகிறோம்’ என்றனா்.