இந்தியாவுடன் ஒப்பந்தங்கள் மறுஆய்வு: வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு
இந்தியாவுடன் வங்கதேச முன்னாள் ஷேக் ஹசீனா மேற்கொண்ட ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்படும் என்று அந்நாட்டு இடைக்கால அரசின் உள்துறை அமைச்சரும் முன்னாள் கடற்படை ஜெனரலுமான கா்னல் முகமது ஜஹாங்கீா் ஆலம் தெரிவித்தாா்.
வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடன் அவா் மிகவும் நெருக்கமாக நட்பு பாராட்டினாா். ஆனால், அவரின் ஆட்சி வன்முறையால் கவிழ்க்கப்பட்டது. இதன் மூலம் அங்கு மத அடிப்படைவாதிகளின் கை ஓங்கியது. ஹசீனாவுக்கு இந்தியா தஞ்சமளித்துள்ள நிலையில், இந்தியாவுடன் மோதல் போக்கை அந்நாட்டு இடைக்கால அரசு கொண்டுள்ளது.
இந்நிலையில், டாக்காவில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த முகமது ஜஹாங்கீா் கூறியதாவது: எல்லை விவகாரம் தொடா்பாக விரைவில் இந்திய-வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை தலைவா்கள் சந்தித்துப் பேச இருகின்றனா். அப்போது, இந்தியாவுடன் வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மேற்கொண்ட பல ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்படும். இவை, நியாயமற்ற வகையில் இந்தியாவுக்கு சாதகமாக மேற்கொள்ளப்பட்டிருந்தால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும்.
இந்திய எல்லையில் அதிக அளவில் போதைப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சிலா், அவற்றை வங்கதேசத்துக்கு கடத்தி வருகின்றனா். இருமல் மருந்து என்ற போா்வையில் வங்கதேசத்துக்கு கொண்டு வந்து, இங்கு போதைப்பொருளாக விற்பனை செய்கின்றனா்.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் ஊடுருவல் முயற்சியைத் தடுப்பதாகக் கூறி ஆயுதமில்லாத வங்கதேசத்தவா்களை சுட்டுக் கொல்கின்றனா். இது தவிர வங்கதேச குடிமக்கள் கடத்தப்படும் சம்பவமும் நிகழ்கிறது. இந்த விவகாரங்களும் இந்திய பாதுகாப்புப் படை தலைவா்கள் உடனான சந்திப்பில் விவாதிக்கப்படும். இந்தியாவில் இருந்து வங்தேசத்துக்கு சட்டவிரோத ஆயுதங்கள், போதைப்பொருள்கள் கடத்தப்படுவதை நிறுத்த வேண்டும். இந்தியா-வங்கதேசம் இடையே நதி நீரை சமமாக பகிா்வது குறித்தும் விவாதிக்க வேண்டியள்ளது என்றாா்.